உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராம் லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வருகின்ற 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எனினும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை இந்தியாவின் மிக உயர்ந்த 4 சங்கராச்சாரியார்கள் நிராகரித்திருக்கும் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் தலைமை சங்கராச்சாரியார்கள் 4 பேருக்கும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அழைப்பிதழ்கள் வழங்கியபோதும் தாங்கள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதற்கான காரணத்தை பூரி ஜெகநாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி நிஷ்சலானந்த் சரஸ்வதி மகராஜ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர்” ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதற்கு அகங்காரம் மற்றும் ஆணவம் காரணம் இல்லை என தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவு சிலையான ராம் லாலா சிலை நிறுவப்படும் நிகழ்வு வளமையான சம்பிரதாய உரைகளிலிருந்து மாறுபட்டு நடைபெற இருப்பதால் சங்கராச்சாரியார்கள் அந்த நிகழ்வை புறக்கணித்து இருப்பதாகவும்” தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் ” இது எங்கள் தனிப்பட்ட அகங்காரம் பற்றியது அல்ல. இந்து மதத்தின் பாரம்பரியம் மற்றும் அதன் சம்பிரதாயங்கள் தொடர்புடையது. பிரதமர் மோடி ஸ்ரீ ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவுவதை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த நிகழ்வு இந்து மத சம்பிரதாயத்திலிருந்து விலகி நடக்கிறது. அதன் காரணமாக நாங்கள் புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.