அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது . இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் மோடி.
நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த நிகழ்வில் 7,000-திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த விழாவை கண்டு ரசித்தனர். பிரதமர் மோடி சிறப்பான பூஜைகள் செய்து மந்திரங்கள் ஓதி தாமரை மலரால் ஸ்ரீ ராமரை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வின் போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
அபிஜித் முகூர்த்தத்தில் 84 வினாடிகளில் ராம் லாலாவின் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து ராம் லாலா சிலையின் முன்பு விழுந்து வணங்கிய அவர் மலர்களை தூவி ஆரத்தி எடுத்து ஸ்ரீ ராமரை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் ராமர் வந்துவிட்டார் என உற்சாகமாக கூறினார். இதனைக் கேட்ட ராமரின் பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்களை முழங்கினர்
.
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின்போது ராணுவ ஹெலிகாப்டர்களின் மூலம் ராமர் கோவில் மீது மலர்கள் தூவபட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு பின் ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மீது மலர்களை தூவி தனது நன்றியினை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.