கேரளா மாநிலத்திற்கு ரூ.26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு கேரளாவிற்கு நிதி ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள மாநிலத்தின் ஆளும் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் கேரளா அரசு தொடர்ந்த மனுவிற்கு எதிராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் பதில அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் இந்தியாவில் பொருளாதார சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர் ஆளும் அரசின் நிர்வாக சீர்கேடு தான் அம்மாநிலத்தில் நிதிநிலை மோசமானதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் பதில் மனுவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி கேரளா அரசு தங்கள் மாநிலத்தின் வரிப்பணத்தை தங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என
கோரிக்கை வைத்திருப்பது தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” சில மாநிலங்கள் ‘எங்கள் வரி எங்கள் பணம்’ என்று பேசி வருகின்றனர். இது நாட்டின் எதிர்காலத்திற்குஆபததான பேச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோடி 2012 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அப்போது குஜராத் சட்டமன்றத்தில் பேசிய மோடி குஜராத் அரசு வரிப்பணமாக மத்திய அரசுக்கு 60,000 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் மத்திய அரசிடமிருந்து குஜராத் மாநிலத்திற்கு என்ன கிடைக்கிறது.? குஜராத் என்ன பிச்சைக்காரர்களின் மாநிலமா.? என்று நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடுமையாக பேசியிருந்தார்.
அன்று மாநில முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி தனது மாநிலத்தின் நிதி ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசை விமர்சித்தார். ஆனால் இன்று கேரளா அரசு தங்களது நிதி ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசிடம் உரிமை கூறுவதை பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கிறார். இது எந்த விதத்தில் நியாயமாகும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.