PM Modi : மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேட் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல இணைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மேலும் கவி சுபாஷ்- ஹேமந்த முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, தாரதாலா- மஜர்ஹட் மெட்ரோ பிரிவு (ஜோகா- எஸ்பிளனேட் லைனின் ஒரு பகுதி) ஆகியவற்றை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். புனே மெட்ரோ ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி வரை, கொச்சி மெட்ரோ ரயில் கட்டம் I விரிவாக்கத் திட்டம் (கட்டம் IB) SN சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து திரிபுனித்துரா மெட்ரோ நிலையம் வரை, ஆக்ரா மெட்ரோவின் தாஜ் ஈஸ்ட் கேட் முதல் மன்காமேஷ்வர் வரை,மற்றும் டெல்லி-மீரட் RRTS காரிடாரின் துஹாய்-மோதிநகர் (வடக்கு)ஆகிய பிரிவுகளில் ரயில் சேவைகளை ஈன்று கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் பிம்ப்ரி சின்ச்வாட் -நிக்டி இடையே புனே மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1 நீட்டிப்புக்கான அடிக்கல் நாட்டுகிறார்.
ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேட் ஆகிய இரண்டு நிலையங்களுக்கிடையில் உள்ள மொத்த 4.8-கிமீ நீளமான சுரங்கப்பாதையில் 1.2-கிமீ தூரம், 30 மீட்டர்கள் ஹூக்ளி ஆற்றின் கீழே உள்ளது. நாட்டின் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும். இது, நகர்ப்புற போக்குவரத்தை மாற்றிஅமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும். நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
கொல்கத்தாவில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல மெட்ரோ ரயில் திட்டங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2014 முதல் 2023 வரை கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த மெட்ரோ திட்டப்பணிகளை முடிக்க ரூ.18,212 கோடி செலவிடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.