fbpx

டிசம்பர் 21-ம் தேதி திருவண்ணாமலையில் பாமக பிரம்மாண்ட மாநாடு…! ராமதாஸ் அறிவிப்பு…!

உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் நாள் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21&ஆம் நாள் சனிக்கிழமை திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான்; உழவர்கள் தான் உணவு படைக்கின்றனர் என்றாலும் கூட உழவர்களுக்கும், உழவுத்தொழிலுக்கும் உரிய முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 48 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் குறைந்து விட்ட நிலையில், அதை அதிகரிப்பதற்கான புதிய பாசனத் திட்டங்கள் எதையும் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை. காவிரி &குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி & நம்பியாறு & கருமேணியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் முடங்கிக் கிடக்கின்றன. காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை; அதற்காக தமிழக அரசும் குரல் கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு நிர்ணயிக்கும் மிகக்குறைந்த கொள்முதல் விலைக்கு மேல் நெல்லுக்கு ரூ.130, கரும்புக்கு ரூ.215 வீதம் மிகக்குறைந்த தொகையையே ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் குறைந்த பட்ச கொள்முதல் விலை நிர்ணயிப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, அதை நிறைவேற்ற மறுக்கிறது. அதனால், ஒரு கட்டத்தில் கிலோ ரூ.180 வரை விற்பனையான தக்காளி, அடுத்த சில வாரங்களிலேயே கிலோ ரூ.1க்கு கூட வாங்க ஆளில்லாமல் சாலைகளில் கொட்டி அழிக்கப்படுகிறது.

வறட்சி, மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை, பயிர்க்கடன்கள் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என உழவர்களின் துயரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உழவர்களின் துயரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு உரைக்கும் வகையில் எடுத்துக் கூறி, தீர்வுகளைப் பெறுவதற்காகவே தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மாநாட்டுப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும்கடந்த 15&ஆம் தேதி முதல் திசம்பர் 3&ஆம் நாள் வரை சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும், புதுச்சேரி & காரைக்காலிலும் சுற்றுப்பயணம் செய்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டிற்கான நோக்கங்களை விளக்கி உழவர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் உழவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநில மாநாட்டில் அரசியல், சமூக வேறுபாடுகளைக் கடந்து, உழவர்கள் என்ற ஒற்றைப் போர்வையில் மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

PMK grand convention in Tiruvannamalai on December 21st

Vignesh

Next Post

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் முழங்கால்கள் பாதிக்கப்படுமா? மருத்துவர் உடைத்த உண்மை..

Tue Nov 19 , 2024
Does drinking water while standing hurt your knees? The doctor broke the truth..

You May Like