பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் கள்ள நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய இரண்டு பேரை ஹைதராபாத் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பழைய நகர் அருகே உள்ள சந்திரயாங்குட்டா என்ற இடத்தில் கள்ள நோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விடப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனையில் இறங்கிய காவல்துறையினர் கள்ள நோட்டு கும்பல் இடமிருந்து 27 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் அவற்றை அச்சடிக்க பயன்படும் இயந்திரங்கள் லேமினேஷன் செய்யப்படும் கருவிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ராமேஸ்வரி மற்றும் ஆட்டோ டிரைவர் ஹசன் பின் ஹம்மூத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ரமேஷ் பாபுவை கைது செய்வதற்கே தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை அறிவித்திருக்கிறது. கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்த ரமேஷ் பாபு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது கள்ளநோட்டு அச்செடிக்கும் தொழிலுக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற அவன் அங்கு கொலை வழக்கில் சிறையில் இருந்த ஹசன் பின் ஹமூதுடன் இணைந்து திட்டம் தீட்டி கள்ள நோட்டு அச்சடிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியான ரமேஷ்பாபுவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.