போரூரில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை எஃப்.ஆர்.எஸ் என்ற செயலியை வைத்து கண்டுபிடித்து இருக்கிறது போலீஸ். நேற்று இரவு போரூர் இன்ஸ்பெக்டர் சென்னையின் ஐயப்பன் தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைப்பது போல் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இவர் மீது ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதை அறிய காவல்துறையினர் பயன்படுத்தும் எஃப்.ஆர்.எஸ் என்ற ஃபேஸ் ரெகக்னிஷன் சாஃப்ட்வேர் மூலம் இவரை பரிசோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது இந்த நபர் மயிலாடுதுறையில் பல முக்கிய வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட அந்த நபரின் பெயர் மயிலாடுதுறையைச் சார்ந்த கார்த்திக் அவரது வயது 27. இவருக்கு கர்லிங் கார்த்திக்க என்ற பட்ட பெயரும் இருந்திருக்கிறது. மேலும் இந்த நபர் மீது மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் மீது பிடிவாரண்ட் இருப்பதையும் அறிந்துள்ளது காவல்துறை. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களிடம் பிடிபட்ட நபரை ஒப்படைத்தனர்.