கேரளாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தது தொடர்பாக பத்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கேரள போலீசார் மாநிலம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பத்து நபர்களை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் கைப்பற்றி இருக்கின்றனர்.
குழந்தைகள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதற்கு தனிப்படையை உருவாக்கி மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அந்த மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வேட்டையில் பத்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்களில் நான்கு பேர் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 நபர்கள் கொச்சி மற்றும் இடுக்கியில் இருந்தும் மற்ற இரண்டு நபர்களும் ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் பகுதியில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து குழந்தைகள் தொடர்பான 123 ஆபாசப் படங்கள் அடங்கிய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்திய குற்றவியல் சட்டத்தின் படி குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை பார்ப்பது அவற்றை பிறருக்கு விநியோகிப்பது மற்றும் அவற்றை பாதுகாத்து வைப்பது கிரிமினல் குற்றமாகும். இதற்கு ஐந்து வருட சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.