கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மகன் பிணமாக தோன்றியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கஞ்சா போதைக்கு அடிமையான சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மற்றும் செந்தமிழ் செல்வி தம்பதியினர். இவர்களில் செந்தமிழ் செல்வி தூத்துக்குடி கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ. இவர் தொழுதூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி முதல் இவரை காணவில்லை என காவல்துறையில் புகாரளித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். அந்த ஓர் இளைஞர்களும் வனப்பகுதிகளிலும் நீர் நிலைகளிலும் ஜெகன் ஸ்ரீயை தேடியிருக்கின்றனர் .
கூத்தக்குடி அருகே இருக்கக்கூடிய சமத்துவபுரத்தில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ஜெகன் ஸ்ரீயை தாங்கள் தான் கொலை செய்து புதைத்ததாக பேசியிருக்கின்றனர். இதனைக் கேட்ட ஒரு சிறுவன் கூத்தக்குடி கிராமத்து இளைஞர்களிடம் தகவல் தெரிவித்துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் காவல்துறையிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக சமத்துவபுரம் சென்ற காவல்துறையினர் நான்கு கஞ்சா இளைஞர்களையும் கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெகன் ஸ்ரீயை தாங்கள் தான் கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டனர். மேலும் கூத்தக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டினர். இதனைத் தொடர்ந்து ஜெகன் ஸ்ரீயின் உடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கஞ்சா மற்றும் மது போதையினால் இந்த கொலை எற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். போதையிலிருந்த இளைஞர்கள் மது அருந்த ஜெகன் ஸ்ரீயை கூப்பிட்டு சென்று பாட்டிலால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.