இனி, பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்த நிகழ்ச்சியை நடத்தும் கட்சிகளிடமிருந்து கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மார்ச் 16ஆம் தேதி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக காவல் துறையில் அனுமதி கோரப்பட்ட நிலையில், கோவில் திருவிழா மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி மறுப்பை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நிபந்தனைகளுடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
முதலில், காவல்துறை பாதுகாப்பு வழங்க ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என, இந்த மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சசிகுமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் பொது இடங்களில் நடைபெறும் அனைத்து கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்,பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறை இருப்பதாக தெரிவித்தார். மேலும், தினந்தோறும் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் பிரதான பொறுப்பு அல்ல. அதேநேரம், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே காவல்துறை செயல்படுகிறது என்பதால், அரசு நிதியை வீணடிக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், நாம் தமிழர் கட்சி நடத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தின் போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அக்கட்சியே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
Read More: இனி எச்சில் இலை மீது அங்கபிரதட்சணம் செய்யக்கூடாது -நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!