தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற நாளை தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது. பொங்கல் பரிசு வருகிற 9ம் தேதி முதல்வழங்குவதை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பொருட்டு 03-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் பெற இன்றே கடைசி நாள் என்பதால் அதனை வாங்காதவர்கள் உடனடியாக பெற்றுக் கொள்ளவும்.
தகுதியான அனைவருக்கும் பொங்கல்பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், பொங்கல் பரிசு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
