Pope Francis: நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸின் உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல, இருப்பினும், அவர் ஆபத்திலிருந்து மீளவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பிப்ரவரி 14 அன்று பிரான்சிஸ்க்கு மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்ததை அடுத்து ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற உயிரினங்களை உள்ளடக்கிய ஒரு சிக்கலான சுவாச தொற்று மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சியின் மேல் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தோன்றுவதைக் கண்டறிந்தனர். அவரது நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், குறைந்தது அடுத்த வாரம் முழுவதும் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருப்பார் என்று அவரது மருத்துவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருவதாக குறிப்பிட்ட மருத்துவர், இந்த ஞாயிற்றுக்கிழமை வாட்டிக்கனில் வாராந்திர பொது பிரார்த்தனையை பிரான்சிஸ் தலைமை தாங்குவாரா இல்லையா என்பது அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். போப் பிரான்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை ஆனால் இன்னும் அவர் ஆபத்து கட்டத்தில் இருந்து மீளவில்லை என்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவுக்கு குணமாகவில்லை என்றும் அவரது மருத்துவர் செர்ஜியோ அல்ஃபியரி தெரிவித்துள்ளார்.