அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அப்பள்ளி மாணவிகளை ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால், எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா, அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஆசிரியர் இருந்த அறையை திறக்க முயற்பட்டனர். அவர்களை திறக்கவிடாமல் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து ஆசிரியரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்தனர். விசாரணைக்குப் பின் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.