விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. இருப்பினும் பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன்” என கூறினார். பின்னர் இது தொடர்பான அறிக்கையை பழ.நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இந்தச் சூழலில் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டுக் கொள்கிறோம். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.