அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான ராஜா. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 23 வயதான பவானி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. தற்போது பவானி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா, அவரது தாய், தந்தையுடன் நகை வாங்குவதற்காக அரியலூருக்கு சென்றுள்ளனர். இதனால் பவானி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நகை வாங்க சென்றவர்கள் வீட்டிற்க்கு வந்த பார்த்த போது, படுக்கை அறையில் இருந்த ஒரு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பவானி பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில், பவானி செங்கராயன்கட்டளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தனது கணவர் ராஜாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பவானியின் தந்தை சேகர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.