பிரேமலா விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின்போது, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது, தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா..? யார் யாரோ சொல்வதை வைத்துக் கொண்டு எங்களைக் கேட்க வேண்டாம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” என காட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ராஜ்யசபா சீட் விஷயத்தில் அதிமுகவுடன் தங்களுக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் பாலமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”கூட்டணி ஒப்பந்தத்தின்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பிரேமலதா விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறியுள்ளார்கள். இதனால், இப்போது இருந்தே நமது கட்சியினர் கடுமையாக உழைத்து, கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்” என பேசினார். தற்போது இவரின் பேச்சு பேசுபொருளாகி உள்ளது. மேலும், அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அப்படி கூட்டணி அமைக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், விஜய் துணை முதலமைச்சராகும் இருக்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான், பிரேமலா விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.