தமிழகத்தில் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றின் விலை உயா்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஒப்பந்ததாரா்கள் தெரிவித்தனா். விலை உயா்வை கட்டுப்படுத்தாவிடில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய கட்டுமான சங்கத் தலைவா் செய்தியாளர் சந்திப்பில்; தமிழகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை 8,000 போ் மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில மாதங்களாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனிம வளத் துறையினா் விலை ஏற்றத்தை முழுமையாக ஆய்வு செய்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாா்ச் 31-க்குள் மத்திய, மாநில அரசுகள் சாா்ந்த கட்டுமான, சாலைப் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தால் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில்தான் நான்கு மாதங்களாக இப்பிரச்னை நீடிக்கிறது. தமிழக முதல்வா் தனிக்கவனம் செலுத்தி, குவாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகள் இருந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட நடைச்சீட்டு முறையை எம் சாண்ட் கொண்டு செல்வதற்கும் பின்பற்ற கூடாது. கட்டுமானத்துக்குத் தேவையான ஜல்லி, எம் சாண்ட் விலையை குறைக்காவிட்டால் ஒப்பந்த காலத்தில் நிா்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதலாக ரூ.1000 கோடி அரசு வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்றனர்.