வாராணசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5வது கட்டத் தேர்தல் வருகிற மே 20ம் தேதி நாடு முழுவதும் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 6ம் கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 7ம் கட்டமாக 57 தொகுதிகளில் ஜூன் 1ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தலில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாராணசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, வாகனப் பேரணியில் ஈடுபட்டவாறே பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.