பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. நேற்று பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது இந்திய பாதுகாப்பு படைகளின் மீது இருக்கும் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பதிலடி நடவடிக்கை, இலக்கு மற்றும் நேரத்தைத் தீர்மானிக்க இராணுவத்திற்கு அவர் சுதந்திரம் வழங்கினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முழு அளவிலான போர் நடக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இன்னும் சில போர் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர். ஒரு வேளை போர் நடந்தால், அதன் செலவு மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது பல லட்சம் கோடி ரூபாய் வரை செல்லக்கூடும். இருப்பினும், போரின் செலவை துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் கடினம். காரணம், அது போரின் காலம், தீவிரம் மற்றும் நோக்கம் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.
1999 கார்கில் போரின் மதிப்பிடப்பட்ட செலவு இந்தியாவிற்கு ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை இருந்தது. அந்தக் கால சூழலில் இது ஒரு பெரிய தொகை. இதில் இராணுவ நடவடிக்கைகள், வெடிமருந்துகள், தளவாடங்கள், வீரர்களின் சம்பளம் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் அடங்கும். இந்திய விமானப்படையின் விமானத் தாக்குதல்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.2,000 கோடி. இராணுவத்தின் தினசரி நடவடிக்கைகளுக்கு சுமார் ரூ.10-15 கோடி செலவானது.
போர் செலவு இப்போது ஏன் பல மடங்கு அதிகரிக்கும்?
இப்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு முழுமையான போர் நடந்தால், அதன் செலவு கார்கில் போரை விட மிக அதிகமாக இருக்கும். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இரு நாடுகளின் படைகளும் 1999 ஐ விட மிகப் பெரியதாகவும் மேம்பட்டதாகவும் மாறிவிட்டன. நவீன ஆயுத அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் விலை உயர்ந்தவை. இரண்டாவதாக, கார்கில் போர், ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியில் நடத்தப்பட்டது. ஒரு முழுமையான போர் முழு எல்லைப் பகுதி, வான்வெளி மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியது. இது செலவை பன்மடங்கு அதிகரிக்கும். மூன்றாவதாக, கார்கில் போர் சுமார் இரண்டரை மாதங்கள் நீடித்தது. ஒரு முழுமையான போர் இதை விட நீண்ட காலம் நீடிக்கும். இது தினசரி மற்றும் ஒட்டுமொத்த செலவுகளில் மிகப்பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்
போர் பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் உற்பத்தியில் குறைவு, வர்த்தகத்தில் இடையூறு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை இழப்பு ஆகியவை அடங்கும். மறைமுக பொருளாதார செலவு நேரடி இராணுவ செலவை விட மிக அதிகமாக இருக்கலாம். இது தவிர, வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து இழப்பு மற்றும் காயமடைந்தவர்களை பராமரிப்பதற்கான செலவும் மிக அதிகமாக இருக்கும்.
இதை மதிப்பிடுவது கடினம். பொருளாதாரத்தில் இப்போது தான் இந்தியா வளர்ந்து வருகிறது. இந்த சூழலில் போர் ஏற்பட்டால் அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் அதே நேரம் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே அதல பாதாளத்தில் உள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்தால் அதை மீண்டும் கட்டியெழுப்பவே சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
Read More : எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்.. 6-வது நாளாக துப்பாக்கிச்சூடு.. பதிலடி கொடுக்கும் இந்தியா..