எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை, பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலை அங்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்றும் நம் நாட்டு பிரதமருடன் ஒப்பிடும்போது மோடியின் ஆட்சி சிறப்பானதாக உள்ளது என்று பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி பரவிவருகிறது. இந்தியாவில் மோடியை மக்கள் மதிப்புடன் பின்பற்றிவருவதாக சுட்டிக்காட்டி பேசிய அந்த நபர், பாகிஸ்தானுக்கும் அவரே பிரதமராக கிடைத்திருந்தால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால், அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கி எங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன் என்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உள்ளதே தவிர, இங்கு இஸ்லாம் முழுமையாக நிலைக்கவில்லை என்றும் வீடியோவில் அவர் கூறியுள்ளார்.