கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மற்றும் நாளை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பார்வையிடும் பிரதமர், சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதே போல ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ‘பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் ‘செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி’; வி.எஸ்.எஸ்.சி.யில் ‘ட்ரைசோனிக் காற்று இயக்க சுரங்கம்’ ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்வார். தமிழ்நாட்டில் ரூ.17,300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிக்கான கப்பல் மாற்று மையத்தை உருவாக்கும் நடவடிக்கையாக, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று காலை 10.45 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குப் பிரதமர் செல்கிறார். மாலை 5.15 மணியளவில் மதுரையில் நடைபெறும் ‘எதிர்காலத்தை உருவாக்குதல் – வாகன உற்பத்தி துறையில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான டிஜிட்டல் இயக்கம்’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
நாளை காலை 9:45 மணியளவில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மாலை 4:30 மணியளவில், மகாராஷ்டிராவின் யவத்மாலில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார், மேலும் மகாராஷ்டிராவின் யவத்மாலில் ரூ .4900 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இத்திட்டத்தின் போது பிரதமர் வேளாண் மற்றும் பிற திட்டங்களின் கீழ் பயன்களையும் அவர் விடுவிப்பார்.
English Summary: Prime Minister Modi will visit the states of Kerala, Tamil Nadu and Maharashtra today and tomorrow