fbpx

காசா மருத்துவமனை தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்..!

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 37 மருத்துவ ஊழியர்கள் இறந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுமட்டுமல்லாமல், நள்ளிரவில் காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மருத்துவமனை தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும், இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனை தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிர் இழந்தது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். நடந்துகொண்டிருக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது இஸ்ரேலுக்கு சென்றைடைந்தார். இந்நிலையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Kathir

Next Post

பள்ளி மாணவர்கள், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500..!! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

Wed Oct 18 , 2023
மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500, பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கி வருவதை தொடர்ந்து, கர்நாடகாவிலும் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு […]

You May Like