fbpx

இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு வெளியேற வேண்டும்!… நாட்டை பாதுகாக்க தவறிவிட்டார்!… 80% மக்கள் கருத்து!

80 சதவீத இஸ்ரேலிய மக்கள், நாட்டை பாதுகாக்க தவறிய பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர். பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மருத்துவமனை கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள் என இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றன. காஸா நகரமே சிதைந்து வரும் சூழலில், தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு, பகல்பாராமல் நடந்து வருகிறது.

காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மக்கள் தஞ்சமடைந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் படையினர் மற்றும் பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் சூழலில் எல்லையில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு நேரத்திலும் தாக்குதல் தொடர்வதால், காஸா மற்றும் இஸ்ரேலிய நகரங்களில் எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் இல்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் இருதரப்பில் இருந்தும் கிட்டத்தட்ட உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தநிலையில், 80 சதவீத இஸ்ரேலியர்கள் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு வெளியேற வேண்டும் என்று கருதுவதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. Panel4All உடன் இணைந்து Lazar இன்ஸ்டிட்யூட் மூலம் அக்டோபர் 18 மற்றும் 19 திகதிகளில் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலிய நாளிதழான Maariv இன் புதிய கருத்துக் கணிப்பில் 65 சதவிகித இஸ்ரேலியர்கள் காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை ஆதரிப்பதாகவும், 21 சதவிகிதத்தினர் எதிர்ப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலில் பிரதமரின் லிகுட் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 69 சதவீதம் பேர் உட்பட அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நாட்டின் தோல்விகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று 80 சதவீத இஸ்ரேலியர்கள் நம்புவதாகவும் கருத்துக்கணிப்பு பரிந்துரைத்தது. 8 சதவீத பொது மக்கள் மட்டுமே அவர் [நெதன்யாகு] பொறுப்பல்ல என்று நினைக்கிறார்கள்.

பெஞ்சமின் நெதன்யாகு உலகத் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு உலகளாவிய அரசியல்வாதி என்று அவர் காட்ட முயற்சித்தாலும், இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் நெதன்யாகு வீடு செல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறார்கள். மேலும், 51 சதவீத இஸ்ரேலியர்கள், லெபனானுடனான இஸ்ரேலின் எல்லையில், வடக்குப் பகுதியில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.

Kokila

Next Post

யூடியூபில் 20,00,000 வீடியோக்கள் நீக்கம்..!! உங்க வீடியோவும் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க..!!

Sat Oct 21 , 2023
டெல்லியில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்ச்சியின்போது பேசிய யூடியூப் இந்தியாவுக்கான அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவரான மீரா சாட், ’யூடியூப் விதிகளை மீறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் 10-க்கும் குறைவான பார்வைகளை மட்டுமே கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், யூடியூபின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, வரும் மாதங்களில் இந்தியாவில் ‘வாட்ச் பேஜ்’ என்ற […]

You May Like