தங்கள் துணையுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்முயற்சி திட்டமாக பஞ்சாப் அரசு அறிமுகம் செய்துள்ளது.
பஞ்சாப் சிறைத்துறையின் இந்த முடிவு குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்: பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.
சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது கணவர் அல்லது மனையுடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்படும்.. முதற்கட்டமாக, கோயிண்ட்வால் சாஹிப்பில் உள்ள மத்திய சிறை, நாபாவில் உள்ள புதிய மாவட்ட சிறை மற்றும் பதிண்டாவில் உள்ள பெண்கள் சிறை ஆகியவற்றில் தாம்பத்திய வருகை அனுமதிக்கப்படும் என்று சிறைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்முயற்சி திருமண பந்தங்களை வலுப்படுத்துவதற்கும், கைதிகளின் நன்னடத்தையை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என்று திணைக்களம் எதிர்பார்க்கிறது. அத்தகைய வருகைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதிக்கப்படும் என்று சிறை அதிகாரி மேலும் கூறினார்.
வருகை தரும் மனைவி தங்களின் திருமண சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.. எச்.ஐ.வி அல்லது பிற பாலின பரவும் நோய், கொரோனா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு, சிறைத் துறை கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சிறை வளாகத்தில் சந்திக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
லூதியானா சிறையில் இருந்து தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், சிறைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை, சிறை வளாகத்திற்குள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட அறையில் 2 மணி நேரம் தங்கள் அன்புக்குரியவர்களை நேரில் சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களும் கைதிகளுடன் உணவு உண்டு மகிழலாம். இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது..