தேவநாதனுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை உறுப்பினர்களாக உள்ளனர். முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று காலை நிதி நிறுவன மோசடி தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுக்கு தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேவநாதனுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.