11-வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி அரியானா அணியும், தபாங் டெல்லியை வீழ்த்தி பாட்னா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவிலும் நடைபெற்றன. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி.யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அரியானா வெறும் ஒரு புள்ளி மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. அடுத்த பாதியில் அரியானா அணி எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்து முன்னிலையை அதிகப்படுத்தியது. இதையடுத்து அரியானா 28-25 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி 32-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நாளை(டிசம்பர் 29) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ். பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Readmore: அடுத்த ஷாக்!. ஜெர்மன் நாடாளுமன்றம் கலைப்பு!. தேர்தல் தேதியை அறிவித்தார் ஜனாதிபதி!