தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக தான் டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக பொங்கல் பரிசு ரூ.1,000 பெறுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அந்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிய முதல் நாளே சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி முடங்கியது. தேனி, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து சாதரண முறையில் அவர்களின் ரேஷன் கார்டு எண்ணை குறித்து கொண்டு பொங்கல் தொகுப்பை வழங்க வட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அடுத்து வரும் நாட்களில் இதுபோன்ற சிரமங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.