கள்ளக்காதலியுடன் வாழ்வதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், தனது குடும்பத்தையே விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கங்காதராவை சேர்ந்த வெமுலா ஸ்ரீகாந்த் என்பவர் கரீம்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மம்தா என்ற மனைவியும், அமுல்யா எனும் 5 வயது மகள் மற்றும் அத்வைத் எனும் 20 மாத குழந்தையும் இருந்தனர். இவரது குழந்தைகள் மற்றும் மனைவி சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இறந்த 3 பேர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த போது அவர்கள் மூவர் உடலிலும் ஒரே மாதிரியான விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், ஸ்ரீகாந்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், அவருடன் வாழ்வதற்கு தடையாக இருந்த தனது மனைவி குழந்தைகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி சிறுது சிறிதாக விஷம் கொடுத்து ஏதோ மர்ம நோயினால் உயிரிழந்துவிட்டார்கள் என ஸ்ரீகாந்த் நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த போது பலரிடம் சமூக வலைதளம் மூலம் ஸ்ரீகாந்த் உதவியும் கேட்டும் இருந்துள்ளார். இந்த விவரங்களை காவல்துறையினர் கண்டறிந்ததும், விஷம் குடித்து கல்லூரி பேராசிரியர் ஸ்ரீகாந்த் தற்கொலை செய்து கொண்டார்.