ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்று (ஏப்ரல் 23) முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளன. 35 ஆண்டுகளில் முதல் முறையாக இது போன்ற ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக காஷ்மீரின் முன்னணி பத்திரிகைகள் தங்கள் முன்பக்கங்களை முழுவதுமாக கருப்பு நிறத்தில் அச்சிட்டு, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிரேட்டர் காஷ்மீர், ரைசிங் காஷ்மீர், காஷ்மீர் உஸ்மா, ஆப்தாப், மற்றும் டைமீல் இர்ஷாத் உள்ளிட்ட ஆங்கில மற்றும் உருது மொழி பத்திரிகைகள் தங்களது முன்பக்கங்களை கருப்பு நிறத்தில் அச்சிட்டுள்ளன. இந்த பத்திரிகைகளின் முன்பக்கத்தில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் தலைப்புகள் அச்சிடப்பட்டு, இந்த தாக்குதலால் ஏற்பட்ட துயரத்தை வெளிப்படுத்தியுள்ளன.