பிளஸ் 1 மாணவர்கள் பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 17-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 17-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாக மதிப்பெண் பட்டியலை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால் பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று முதல் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோருபவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.