வாக்குப்பதிவு நாளில் நாடு முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளிலும் இந்தியா முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய சட்டப்பிரிவு 135B-ன் கீழ் ஜனநாயக கடைமையாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சம்பளம் அளிக்கப்பட வேண்டும்.
மக்கள் எந்த இடையூறும் இன்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது மிக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.