பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமன்றி இனி கல்விச்சான்றுகளும் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியை, ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வழக்கில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்று பள்ளிகளில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் எங்கும் நடக்காமல் இருக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாலியல் சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமன்றி இனி கல்விச்சான்றுகளும் ரத்து செய்யப்படும். காவல்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.