மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் புஷ்பா 2 கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் படம் வெளியாகி 7 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 4-ம் தேதி புஷ்பா படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்றார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் அறிவித்தார்.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். எனினும் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று காலை அல்லு அர்ஜுன் விடுதலையானார்.
சிறையில் இருந்து விடுதலையான பின் அல்லு அர்ஜுன் முதன்முறையாக இதுகுறித்து பேசினார். அப்போது “ உலகம் முழுவதிலுமிருந்து தனக்குக் கிடைத்த அன்புக்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
மேலும் “ எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன், கவலைப்பட ஒன்றுமில்லை. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்; நான் சட்டத்தை மதித்து, வழக்கு நடவடிக்கைகளில் காவல்துறைக்கு ஒத்துழைப்பேன், தேவையான உதவிகளை செய்வேன், ”என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் படம் பார்க்க சென்ற போது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இது முற்றிலும் தற்செயலானது, இதன் விளைவாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது. அந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அது எனது தனிப்பட்ட கட்டுப்பாட்டில் இல்லை.
கடந்த 20 வருடங்களாக அந்த தியேட்டருக்கு சென்று வருகிறேன். நான் 30 வருடங்களுக்கும் மேலாக என் மாமாவின் (சிரஞ்சீவி) படங்களைப் பார்க்கப் போகிறேன், ஆனால் இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது, என்னால் முடிந்த வரை எல்லா வகையிலும் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பேன்.” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டதை பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “சட்டம் தன் கடமையை செய்யும் போது, நான் இந்த வழக்கில் தலையிடக்கூடாது, சட்டத்தின் நிலைப்பாட்டில் இருந்து அதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. நான் சட்டத்தை நம்புகிறேன். ஆனால் இது நிச்சயமாக அந்த குடும்பத்திற்கு மிகவும் சவாலான சூழ்நிலை.” என்று தெரிவித்தார்.
Read More : கைதுக்கு காரணமான அல்லு அர்ஜுனின் அந்த ‘சைகை’!. கைது குறித்து தெலுங்கானா போலீசார் கூறியது என்ன தெரியுமா?