அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்ற மகள் என்று கூட பாராமல் தந்தையே மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார்.
இந்த விவகாரம் தாயாருக்கு தெரியவந்த நிலையில், வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்பதால் மகளுக்கு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. அந்த சிசுவை ஒரு சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.
இதன் காரணமாக மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த போது கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூர தந்தை, உடந்தையாக இருந்த தாயார், மெடிக்கல் உரிமையாளர் ஆகிய 3 கைது பேரையும் கைது செய்தனர்.