உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரால், சீனா இந்திய எல்லையில் ஊடுருவக்கூடும் என்று முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்..
கடந்த 2016 முதல் தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ரைசினா மாநாடு (Raisina Dialogue) என்ற பலதரப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.. இந்த மாநாடு புவிசார் அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் முதன்மை மாநாடாக உருவெடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் இந்த மாநாட்டை நடத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரைசினா மாநாடு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டுள்ளனர்..
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் இதில் கலந்துகொண்டுள்ளார்.. அவரிடம், சீனாவை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சீனாவை எதிர்கொள்ள, அமெரிக்கா தயாராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமா என்று சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதில் ரஷ்யா வெற்றி பெற்றால், சீனா இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவக்கூடும் என்று தெரிவித்தார்..
3 வாரப் போரில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பதால், ரஷ்யா உக்ரைன் எல்லையிலிருந்து பின்வாங்க வழிவகை செய்தது என்று கூறினார்..
மேலும் பேசிய அவர் “ இந்திய ராணுவத்திற்கு புதிய தொழில்நுட்பம் தேவை.. ஏனெனில் தேசம் வலுவாக இருந்து தனக்காக பேசினால், உலகம் முழுவதும் விஷயங்கள் அமைதியாக இருக்கும். அணு ஆயுதங்களால் எந்த பயனும் இல்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.. அது அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்ற அந்த செய்தியை வலுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியிருக்கலாம். அதற்காக உங்கள் பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என தெரிவித்தார்..