பெங்களூருவில் இன்று பந்த் தொடங்கியுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்பினர் கோரிக்கை வைத்து பந்த் நடத்தி வருகின்றனர். மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்து முடிந்துள்ளது. இன்று பெங்களூரில் பந்த் தொடங்கி உள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூர் நகரில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முதல் பேருந்துகள் பெங்களூருவுக்குள் செல்லவில்லை.
அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லாரிகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி பெங்களூர் வழியாக மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் கொண்டு செல்லும் சரக்கு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்குகளை எதிர்பார்க்கும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.