நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ரயில்வே காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த இளம் தம்பதிகள். இவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர். இந்நிலையில் ரயில் கான்பூர் நகரில் சென்று கொண்டிருந்தபோது ரயில்வே போலீஸ் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளையும் பேசியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண்ணையும் அவரது காதலரையும் தாக்கியிருக்கிறார் அந்த ரயில்வே போலீஸ். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து தம்பதியினர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த ரயில்வே காவல் அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஜிதேந்தர் சிங் என்ற போலீஸ்காரரை கைது செய்தனர். மேலும் தேஜஸ் ரயிலில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.