தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகள் அனைத்து ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகிறது. விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போவதால், இதற்கான பரிசு தொகுப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் கூடிய, சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு வெளியிடலாமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
அதாவது, மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் ஆங்காங்கே அதிருப்தி நிலவுவதாலும், லோக்சபா தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா? என்றும் அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால், திடீரென மிக்ஜாம் புயலால் 4 மாவட்டங்களில் பாதிப்பை தந்துவிடவும், நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுவிட்டது.
நிவாரண தொகை வழங்கி வரும் நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், அடுத்ததாக தென்மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டுவிட்டது. ஆக, மழை, வெள்ளத்தால் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருகிறதாம். அதாவது, ரொக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
எப்படியும், தென்மாவட்ட மழை பாதிப்புகளை, முதல்வர் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, நிவாரணத் தொகை, பொங்கல் தொகுப்பு என பொதுமக்களுக்கு தரப்படும் பணப்பலன்களை, வங்கிகள் மூலமாகவே தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.