தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை தொடரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை சில நாட்கள் சதமடிக்கவும் கூட செய்தது. இதற்கிடையே, சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இப்போது வெப்பம் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 70 மிமீ, மஞ்சளார் (தேனி), மேட்டூர் (சேலம்), மேற்கு தாம்பரம் பகுதிகளில் 60 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல வெப்பத்தைப் பொறுத்தவரை ஈரோட்டில் வெப்பம் சதமடித்துள்ளது. அங்கே 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும், வரும் நாட்களிலும் கணிசமாக மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (மார்ச் 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மார்ச் 22 மற்றும் மார்ச் 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.