ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ. தீபா எனக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இங்கு வந்தேன். ஜெயலலிதா இங்கு இல்லை என்று சொன்னாலும், அவர் நினைவுகள் எப்போதும் மக்கள் மனதில் இருக்கும். அவர் வாழ்ந்த வீட்டில், அஞ்சலி செலுத்தி அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், அடுத்தாண்டு 2026இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை பாஜகவையும் இணைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துவிட்டார்.
இதனால், தவெகவுடன் கூட்டணியில் இணையலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாலும், ரஜினிகாந்த் இந்த கூட்டணிக்காக முயற்சி செய்வார் என்றும், அதற்காகத்தான் அவர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.