ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டில் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே எறிவது, பலரும் சாதாரணமாகச் செய்யும் ஒரு விஷயம்.. அப்படி ஒரு விஷயம் ராஜ்கோட்டில் சோகமாக மாறியது. குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டிலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேராவல்-பாந்த்ரா ரயிலில் பிற்பகல் 2.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் பாட்டிலை வெளியே வீசியுள்ளார். அந்த பாட்டில், தண்டவாளம் அருகே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் பாதலை தாக்கியது. பாட்டில் நேரடியாக அவரது மார்பில் பட்டதால், சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தார்.
உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். ஆரம்பத்தில், இது மாரடைப்பு என்று கருதினர்,. ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, பாட்டிலின் தாக்கத்தால் சிறுவன் சுயநினைவை இழந்தது தெரியவந்தது.
பின்னர் உடல் ராஜ்கோட்டில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது, அங்கு மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த தாக்கம் அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி, அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக அடையாளம் தெரியாத பயணி மீது புகார் பதிவு செய்துள்ளனர்.
Read more: “தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக்கொண்டேன்..” மும்பை அணியில் இருந்து விலகிய ஜெய்ஸ்வால் விளக்கம்..!!