அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்தது.. இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி நமஸ்தே என்று கூறி ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.. இந்திய தயாரிப்பில் உருவான ஒரு படத்திற்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைப்பது இதுவே முதன்முறையாகும்.. ஸ்லம்டாக் மில்லியன் படத்தை வெளிநாட்டு நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். இதனால் அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக கைத்தட்டியும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார். பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது மேடையில், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட இருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இருவரும் நடனமாட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. தயாரிப்பாளர் ராஜ் கபூர் இதுகுறித்து பேசிய போது “ பிப்ரவரி மாத இறுதியில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் மேடையில் நேரலையில் நடனமாக விரும்பவில்லை.. அவர்கள் இருவருக்கும் வேறு சில பணிகள் இருந்தன.. மேலும் ஒத்திகை செய்ய போதிய நாட்கள் இல்லை.. படத்தில் இடம்பெற்ற ஒரிஜினல் நாட்டு நாட்டு பாடல், இரண்டு மாதங்கள் ஒத்திகை செய்யப்பட்டு 15 நாட்கள் படமாக்கப்பட்டது. ஆனால் ஆஸ்கர் விழா மேடையில் நடனமாட ஒத்திகை செய்ய போதிய நேரம் இல்லாததால், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர். நேரலையில் நடனமாடும் முடிவை கைவிட்டனர்.. ” என்று தெரிவித்தார்..
இதனிடையே எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது மனைவி, ரமா ராஜமௌலி, ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா, ஜூனியர் என்.டி.ஆர், எம்.எம். கீரவாணி மற்றும் அவரது மனைவி ஸ்ரீ வள்ளி, பாடலாசிரியர் சந்திரபோஸ், நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித், எஸ்.எஸ்.கார்த்திகேயா மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஸ்கர் விழாவில், RRR குழு சார்பாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..