அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. நாளை மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கு ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10,000 பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாளைய தினம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மருத்துவமனை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது. இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவுகள் உள்பட சில முக்கிய சிகிச்சை பிரிவுகள் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.