ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது, அதன்பிறகு நடந்த பேரணியில் பேசிய அமித்ஷா, ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார், அதன் கட்டுமானத்தை விரைவுபடுத்தும் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.
அமித்ஷா கூறியதாவது “காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக செஷன்ஸ் கோர்ட், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட், மீண்டும் செஷன்ஸ் கோர்ட் என்று கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன. ஆனால் மோடிஜி வந்தார். ஒரு நாள் காலை, உச்ச நீதிமன்ற உத்தரவும் வந்தது. ராமர் கோவிலுக்கு பூமிபூஜை செய்து, கட்டுமானப் பணிகள் தொடங்கினார்.
2019 தேர்தலில் நான் பாஜகவின் தலைவராகவும், ராகுல் பாபா காங்கிரஸ் தலைவராகவும் இருந்தோம். ராகுல் பாபா தினமும் “அங்கு கோயில் கட்டுவேன் ஆனால் தேதியை சொல்ல மாட்டேன்” என்று கூறுவார். கேளுங்கள், ராகுல் பாபா மற்றும் சப்ரூம் மக்களே, உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் ஜனவரி 1, 2024 அன்று, அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் தயாராக இருப்பதைக் காண்பீர்கள்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் பாஜக அரசாங்கம் திரிபுராவில் வளர்ச்சியின் “டிரெய்லரை” இப்போது காட்டியுள்ளது, படம் இன்னும் எஞ்சியுள்ளது” என்றும் கூறினார். மோடியின் வளர்ச்சி மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவை “மிகவும் வளமான மாநிலமாக” மாற்றுவதாக உறுதியளித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் அடிக்கடி எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்களை கொன்றுவிடுவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உரி மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதல்களுக்கு உறுதியான பதில் அளிக்கப்பட்டு வருகிறது என்ரூ அமித்ஷா கூறினார்.