பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி தேடப்பட்டு வரும் நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1ஆம் தேதியன்று திடீரென இரண்டு குண்டுகள் வெடித்ததால் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. குண்டு வெடித்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், ஒருவரின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
அந்த நபரின் உருவப்படம் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதோடு, அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றவாளி ராய்ச்சூர் அல்லது கல்புர்கியில் பதுங்கியிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த குற்றவாளி இந்தியாவை சேர்ந்தவர்தானா? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அந்த நபர் இந்த குண்டு வெடிப்பை செய்ய ரகசிய இயக்கங்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக ஆர்டர் பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கர்நாடக காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர், குற்றவாளியை போலீஸார் நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.