பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட இயக்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதேபோல், சீமானுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு, வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மீது காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். முன்னதாக 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் 3-வது முறை சம்மன் அளிக்க போலீசார் அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
வருகிற 20-ந் தேதி நேரில் ஆஜராகும் படி ராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர் போலீசார் சம்மன் அளிக்க வந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.