வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் ’வாரசுடு’ என்ற டைட்டிலில் ரிலீஸாகும் இந்தப் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக இந்தப் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ இருவருமே தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வாரிசு படத்தின் ரிலீஸுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் தமிழ்த் திரையுலகில் இருந்து ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். காலை 9 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அடையாள அட்டையுடன் சென்ற மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடந்திவரும் அதேநேரம், அலுவலகம் வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். மேலும், ரசிகர்களுக்கு சுடச் சுட பிரியாணியும் சிக்கன் 65-யும் தயாராகி வருகிறது. வாரிசு படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையிலும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க விஜய் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், பனையூரில் குவிந்துள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அதேபோல், ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் விஜய் எதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வாரிசு படத்தின் வெளியீட்டுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்தால் அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என விஜய் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் வாரிசு படம் வெளியான பின்னர் அரசியல் பயணத்தை தொடங்குவது பற்றியும் விஜய் முக்கியமான முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலை மனதில் வைத்தும், எதிர்கால திட்டத்தோடும் அரசியலில் அடியெடுத்து வைப்பது குறித்து விஜய் தீவிரமாக யோசித்து வருகிறாராம். அதனால் தான் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்துக்கு விஜய் ஏற்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.