தனது நடைப்பயணத்திற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீது உள்ளிட்ட சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் தலா ரூ.5 லட்சத்திற்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், ரஃபேல் வாட்ச்-ஐ வாங்கியது குறித்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்தது வரை, வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட சொத்து விவரங்களை வெளியிடுவேன் என்றும், தமது பட்டியலில் இல்லாத சொத்துக்களை கண்டுபிடித்தால் மொத்த சொத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை போல வருமான விவரங்களையும், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.