சென்னை காசிமேட்டை சேர்ந்த பிரபல சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை விரர் ஆறுமுகம் காலமானார். சார்பட்டா பரம்பரை என்கிற பெயரை தெரியாதோர் இல்லை என்றே சொல்லலாம். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையில் கபிலன் என்கிற நாயகன் கதாபாத்திரம் காசிமேட்டில் வாழ்ந்து வந்த ஆறுமுகம் என்பவரின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.
குத்துச்சண்டை வீரர் ஆறுமுகம் தொழில் முறை குத்துசண்டை போட்டிகளில் 128 முறை எதிர் வீரரை நாக்-அவுட் முறையில் வீழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகாலம் குத்துச்சண்டையில் கலக்கிய இவர், கடந்த 3 மாதங்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆறுமுகத்தின் உடலுக்கு அவரது சமகாலகட்ட சார்பட்டா பரம்பரை மற்றும் பிற பரம்பரையை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வில்லன் நடிகர் சாய்தீனா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.