நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 8 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக வேலை பார்த்து வருகிறது. அதே நேரத்தில், பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
இந்தநிலையில் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் ஆகியவற்றின் விலையனது கடும் உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவு ஏற்படும் என கருத்துகள் வெளியாகின. இந்நிலையில் தான் மத்திய அரசு சமையல் சிலிண்டருக்கு 200 ரூபாயை குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் சிலிண்டருக்கு 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த விலை குறைப்பை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் பயத்தால், விலை குறைக்கப்பட்டதாக கூறியுள்ளன. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் கேஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1,100-க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு! என பாஜக அரசை கிண்டல் செய்துள்ளார்.